May 11, 2021

ஸர்மிளா ஸெய்யித்

பேசப்படாதவை

வெநாடுகளுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கப் பணிப்பெண்களாகச் சென்று வந்த பெண்களை திருமணம் செய்ய ஆண்கள் விரும்புவதில்லை என்று அந்தத் தாய் சொல்லிக் கொண்டிருந்தது காதில் விழுந்ததும் சுதாகரித்துக் கொண்டு விபரம் அறிய விரும்பினேன். அதென்ன மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று வந்த என்று கேட்டேன். அங்கு எல்லாம் பெண்கள் ஒழுங்கில்லையாம். ஒரு மாதிரியாகத் திரிவார்களாம். யாரும் யாரோடும் போவதுபோல என்று பதில் வந்தது.

யாரும் யாருடனும் போவதென்றால்? அப்படிப் பார்த்தால் மத்திய கிழக்கிலிருந்து வரும் ஆண்கள் எல்லாம் ஒழுங்கா? அவர்கள் ஒழுங்கு தவறுவதேயில்லையா? அதென்ன மத்திய கிழக்கு மட்டும்? என்ன இருந்தாலும் அவர்கள் ஆண்கள். சேற்றைக் கண்டால் மிதிப்பார்கள். தண்ணீர் உள்ள இடத்தில் கழுவிக் கொள்வார்கள் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்கிறார் அவர்.

மத்தியகிழக்கில் வேலை செய்யும் ஆண்கள் பலர் பாக்கற்றில் ஆணுறை வைத்துக் கொண்டுதான் திரிகிறார்களாம் என்று தோழியொருத்தி சொல்லியது நினைவு வந்தது. அதை அவளிடம் சொல்லியது வேறு யாருமில்லை. அவளது கணவனேதான். இதனை அவன் சொன்னதற்குக் காரணம் தானும் பாக்கற்றில் ஆணுறை வைத்திருப்பவன்தான் என்று நேர்மையைப் பறைசாற்றுவதற்கு அல்ல, தானொருவன்தான் அப்படியாக இல்லை என்று சொல்லி மனைவியிடம் உத்தமன் பெயர் எடுப்பதற்காக. இதைப் பற்றி அவளுடன் பேச விழைந்தபோது அவள் என்னைக் கோபித்துக் கொண்டாள். அவள் கணவன் நல்லவனா கெட்டவனா என்று நிரூபிப்பதோ அல்லது வெளிப்படுத்துவதோ எனது தேவையாக இருக்கவில்லை. ஆனால் பாலுணர்வுத் தொடர்பு கொண்டு ஒருவரின் மொத்த கேரக்டரையும் முடிவு செய்வது நியாயமா என்று அவளைச் சிந்திக்கச் செய்ய முயற்சித்து தோற்றுப் போனேன்.

அந்த சம்பவத்திற்குப் பிறகாக இந்த நிகழ்ச்சி. மத்திய கிழக்கிற்குச் சென்று எட்டு வருடங்களுக்கும் மேலாக வெவ்வேறு மூன்று நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்ணாக உழைத்து தனக்கென்று வீட்டைக் கட்டி நகை நட்டுக்களெல்லாம் சேர்த்துக் கொண்டு திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண்ணை ஆண்கள் வேண்டாம் என்கிறார்கள் என்று அவளின் தாயார் சொன்னபோது, அடேய் இதெல்லாம் ரொம்ப ஓவர்டா என்று செவிட்டிலேயே அறையணும்போல் இருந்தது,

ஒரு திருமணம் பேசப்படும்போது மணமகன் நல்லவனா என்று பார்க்க, குடிப்பழக்கம், சிகரட் பாவனை, பெண் சகவாசம் – இதெல்லாம் உண்டா என்று பார்ப்பார்கள். குடிப்பழக்கம், சிகரட் பாவணை இல்லாத நல்லபடியாகச் சம்பாதிக்கும் ஒரு ஆணை பெண் சகவாசம் உள்ளதென்ற காரணத்திற்காக நிராரிப்பதில்லை. அதொரு பொருட்டே இல்லை. ஆம்பிளை கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான் என்று கிசுகிசுப்பதோடு நிறுத்திக் கொள்வார்கள்.

பெண் என்று வரும்போது ஒழுக்கத்தை அளவிடுகின்ற ஒரேயொரு கருவி அவளது உடல் மட்டும்தான். பாலியல் ஒழுக்கம் என்கிறபோது ஒரு பெண்ணுடன் ஓர் ஆணும் சம்பந்தப்படுகின்றான் என்பது மறக்கப்பட்டுவிடுகின்றது. அல்லது அதற்குப் பொருளில்லை.

ஆணாகட்டும் பெண்ணாகட்டும் பாலியல் தேவை என்றாகும்போது அது மத்திய கிழக்கிற்குச் சென்ற ஆண் பெண் என்று குறிபார்த்துத் தாக்குவதற்கு பாலைவன வியாதி இல்லை. மத்திய கிழக்கில் என்பதற்கு சில காரணங்கள் இருக்க முடியும். அங்கு பணியாளர்களாக அதிகப்படியான ஆண்களும் பெண்களும் செல்கிறார்கள் என்பது ஒரு காரணம். அவர்கள் பெரும்பாலும் குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் வாழ்கிறார்கள் என்பது இன்னொரு காரணம். ஆனால் பாலியல் தேவையைத் தீர்த்துக் கொள்வதற்கு அது மத்திய கிழக்காகத்தான் இருக்கவேண்டும் என்று எந்த அவசியமுமில்லை. அமெரிக்காவோ, ஆப்பிரிக்கா, ஐரோப்பாவோ எந்த நாட்டில் வாழும், பணி செய்யும் ஆணும் பெண்ணும் இந்த சூழ்நிலைகளுக்குள் சிக்குப்பட இடமுண்டு. பொத்தாம் பொதுவாக அனைவருமே இப்படித்தான் என்ற முடிவுக்கு வருவதென்பதும் கூடாது. அப்படியிருக்கவும் அவசியமில்லை.

திருமணம் பற்றி எல்லோருக்கும் ஒரு கனவிருப்பது நியாயம்தான். தனது மனைவி இப்படியாக இருக்கவேண்டும் என்று ஆணும், கணவன் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று பெண்ணும் எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால் பணிப்பெண்ணாகச் சென்றுவந்த பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று முத்திரையடித்து அவர்களைத் திருமணத்திற்கும் குடும்ப வாழ்விற்கும் பொருத்தமற்றவர்களாக்குவது ஏற்றுக் கொள்ளவே முடியாத ஈனச் செயல்.

மத்தியகிழக்கிற்குச் சென்றுவந்த அங்கு இன்னும் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற ஆண்களை எல்லாம் வேண்டாம் என்று பெண்கள் மறுக்கத் தொடங்கினார்கள் என்றால் என்னாகும்? பிலிப்பின்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து பாலியல் தொழிலுக்கென்றே வந்து அரபு நாடுகளில் இருக்கும் பெண்களோடுதான் காலம் முழுவதும் படுத்தெழும்ப வரும்.

வெளிநாட்டில் கண்காணாத தேசத்தில் பாக்கெற்றில் ஆணுறையுடன் திரிந்துவிட்டு நாடு திரும்பியதும் உத்தமனாகி ”வெளிநாடு போகாத பெண்ணென்றால் திருமணத்திற்குத் தயார்” என்று தோளைத் தூக்கிக் கொண்டு திரிகின்ற ஆண்கள் அவர்கள் யாராக இருந்தாலும் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் கதவை சாத்தி வைத்து வெளுக்க வேண்டும் என்பேன். ஒரு பெண்ணை ஒழுக்கங்கெட்டவள் என்று ஒரு ஆண் சொல்லத் துணிந்துவிட்டான் என்றால் அவன் ஆணுறை பாவித்ததனை மறைமுகமாக ஒப்புக் கொள்கிறான் என்றுதான் பொருள்.

தனது மகளை திருமணம் செய்ய மறுத்தவர்கள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்த தாயிடம் நான் சொன்னது இதுதான். ”இவர்கள் உங்கள் மகளை மணந்து கொள்ளவில்லை என்பதற்காக வருந்தாதீர்கள். அவர்கள் ஏற்கனவே பழம் தின்று கொட்டையும் போட்டவர்கள்”

அந்தத் தாய்க்கு நான் சொன்னது புரியவில்லை. வெளிநாட்டுக்கு ஒரு பெண் பணிப்பெண்ணாகச் சென்றதற்காக என்றில்லை, எந்தவொரு காரணத்திற்காக இருந்தாலும் பெண்ணை ஒழுக்கங்கெட்டவள் என்று சொல்வதற்கு ஆண்களுக்குத் தகுதியும் கிடையாது, அந்த ஒழுக்கத்திற்குப் பொருளும் கிடையாது. ஒழுக்கம் என்ற சொல்லே, ஆண்கள் தங்களின் சௌகரியத்திற்குப் பயன்படுத்தவென்றே அவர்களாலேயே கண்டறியப்பட்டது. அதைப் பிடித்துக் கொண்டு தொங்குகின்ற ஆண்கள் பெண்கள் நிராகரிக்கப்படவேண்டியவர்கள்.

ஒழுக்கம் என்பதற்கு ஒரு பொருள் இருக்குமாக இருந்தால், அது நிச்சயமாக உடலில் இருக்க முடியாது. அது ஒருவரது நேர்மைத் திறன் சார்ந்தது. நேர்மையான ஒரு ஆணோ பெண்ணோ இன்னொரு ஆணையோ பெண்ணையோ ஒழுக்கமற்றவர் என்று அத்தனை எளிதாக லேபல் அடித்துவிடுவது சாத்தியமில்லை. இங்கே பாலியல் ஒழுக்கமென்பது ஒருவனுக்கு ஒருத்தி என்பதல்ல. உறவு கொண்டவர்களுக்கு நேர்மையாக இருப்பது என்பதாகத்தான் இருக்க முடியும். இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்கின்றளவுக்கு நமது சமூகம் இன்னும் நாகரிகமடையவுமில்லை, நமது கல்வியிலும் அது இல்லை. எல்லா உறவிலும் கலவியிலும் அது எந்த இருவர் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்களிடையே இருக்கக்கூடிய நேர்மைதான் ஒழுக்கம். ஆணிய சிந்தனைகள் வேரோடிய நம் சமூக அமைப்பில் கலவி கொள்வது ஆண்களின் தகுதி என்றும் பெண்களின் ஒழுக்கக்கேடு என்றும் ஆகியிருக்கிறது.

Sharmila Seyyid
Author and Social Worker
From Sri Lanka